×

தேசியவாத காங்கிரசில் பிளவு இல்லை: சரத் பவார் பேட்டி

கோலாப்பூர்: தேசியவாத காங்கிரசில் பிளவு இல்லை என்றும் எம்எல்ஏக்கள் என்றால் அது முழு கட்சியையும் குறிக்காது என சரத்பவார் கூறினார். மகாராஷ்டிராவில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே அணி -பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த ஜூலை 2ம் தேதி தேசியவாத காங்கிரசின் முன்னணி தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் மற்றும் 8 எம்எல்ஏக்கள் திடீரென ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர்.அஜித் பவார் துணைமுதல்வராகவும், மீதி உள்ள எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். சரத் பவார் தலைமையிலான கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

சில நாட்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே பேட்டியளிக்கையில்,‘‘ கட்சியில் பிளவு எதுவும் ஏற்படவில்லை. அஜித் பவார் கட்சி தலைவராக தொடர்ந்து நீடிக்கிறார்’’ என்றார். அது பற்றி சரத் பவாரிடம் கேட்டபோது, ‘‘ஆமாம், அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’’ என்றார். சில மணி நேரங்கள் கழித்து தான் அவ்வாறு கூறவில்லை என மறுத்தார்.

இந்நிலையில் சரத் பவார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கட்சியின் தேசிய தலைவராக நான் உள்ளேன். மாநில தலைவராக ஜெயந்த் பாட்டீல் உள்ளார்.தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்படவில்லை. சில எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றது உண்மை. எம்எல்ஏக்கள் என்றால் முழு கட்சி என்று அர்த்தமாகாது.கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எம்எல்ஏக்களுக்கு அவ்வளவு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

The post தேசியவாத காங்கிரசில் பிளவு இல்லை: சரத் பவார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nationalist Congress ,Sharad Pawar ,Kolhapur ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களை பிரிப்பதற்கு பிரதமர் முயற்சி: சரத்பவார் விமர்சனம்